அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? ஓம் நமச்சிவாய ஜெய்ஹிந்த்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த ரத்ததானம் மற்றும் நற்பணி திட்ட விழாவில் பேசிய தனுஷின் உரை, அரசியல் களத்தில் அவர் கால் பதிக்க உள்ளாரா என்ற ஊகங்களுக்கு வலு சேர்த்துள்ளது.

மேடையில் பேசிய தனுஷ், “இவ்வளவு பெரிய ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். சினிமா விழாக்கள், ஆடியோ லாஞ்ச்கள் மட்டும் அல்லாமல், உங்கள் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கும், ஏழை எளிய குடும்பங்களுக்கும் உதவும் வகையில் நற்பணிகளில் ஈடுபடுங்கள். உங்களை நினைத்து நான் பெருமைப்பட வேண்டும்” என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, தனது உரையை “ஓம் நமசிவாய… ஜெய் ஹிந்த்” என்று நிறைவு செய்தது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த முழக்கமும், ரசிகர் மன்றங்களை மக்கள் சேவைக்குத் திருப்ப வேண்டும் என்ற அவரது அழைப்பும், அரசியல் பிரவேசத்திற்கான மறைமுக அறிகுறியா என்ற விவாதத்தை சமூக வலைதளங்களில் தீவிரப்படுத்தியுள்ளது.

இருப்பினும், அரசியலுக்கு வருவதாக தனுஷ் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், அவரது சமீபத்திய பேச்சு, ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Scroll to Top