“இந்தியாவின் முதல் மனிதர் விண்வெளி பயணத் திட்டமான ககன்யான் திட்டத்தில், விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு மீண்டும் கொண்டு வரும் 3 முக்கிய தகுதிச் சோதனைகளை (Qualification Tests) இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
முதல் சோதனையாக, Crew Module Uprighting System (CMUS) பரிசோதிக்கப்பட்டது. கடலில் தரையிறங்கிய பிறகு, கேப்சூல் தானாகவே நேராக நிற்கும் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டது. இது விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான தொழில்நுட்பமாகும்.
இரண்டாவது சோதனையில், Crew Module – Service Module Connect & Disconnect System (CSCDS) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பூமிக்குள் மீண்டும் நுழைவதற்கு முன், சேவைப் பகுதி (Service Module) மற்றும் விண்வெளி வீரர்கள் இருக்கும் Crew Module ஆகியவை பாதுகாப்பாகப் பிரியும் அமைப்பு உறுதி செய்யப்பட்டது.
மூன்றாவது சோதனையாக, Apex Cover Separation நடைபெறும்போது Crew Module மீது ஏற்படும் அழுத்தத்தைத் தாங்கும் கட்டமைப்பு வலிமை (Structural Qualification Test) வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. Apex Cover அகற்றப்பட்ட பிறகே பாராசூட் திறந்து, கேப்சூல் பாதுகாப்பாக கடலில் தரையிறங்கும்.
இந்த வெற்றிகரமான சோதனைகள் குறித்து மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இது மிக முக்கியமான மைல்கல்” என்று தெரிவித்துள்ளார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யான்… விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு மீண்டும் கொண்டு வர உதவும் 3 முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக சோதித்துள்ள இஸ்ரோ, திட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது.


