இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ரெடி!

இந்திய ரயில்வே வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 17 அன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள இன்டிகிரல் கோச் பேக்டரி (ICF)-யில் முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் மின்சாரம் உருவாக்கி இயங்கும் இந்த ரயில், புகை அல்லது கார்பன் வெளியேற்றம் இல்லாமல் நீராவியை மட்டுமே வெளியிடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும். 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், ஒரே நேரத்தில் 2,600-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, ஜப்பான், சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்குப் பிறகு, ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது. பசுமை போக்குவரத்தை நோக்கிய இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய முன்னேற்றமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

Scroll to Top