உக்ரைன் மீது 2022-ஆம் ஆண்டு ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தும் சூழல் ஏற்பட்டதாகவும், அதைத் தடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பங்கு வகித்ததாகவும் போலந்து துணை வெளியுறவுத்துறை அமைச்சர் வ்லாடிஸ்லாவ் டியோபில் பார்தோஸ்வஸ்கி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா–போலந்து பொருளாதார ஆணையக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் மோடி கூறுவதை அதிபர் விளாடிமிர் புதின் கவனமாகக் கேட்பார்.
புதினை பாதிக்கக்கூடிய உலகத் தலைவர்களில் மோடி ஒருவராக உள்ளார்” என்று கூறினார். 2022-இல் ரஷ்யா தந்திரோபாய (Tactical) அணு ஆயுதத்தை பயன்படுத்தும் அபாயம் ஏற்பட்டபோது, மோடி எடுத்த ராஜதந்திர முயற்சிகள் அந்த முடிவை மாற்ற உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யா–உக்ரைன் போரில் இந்தியா எந்த ஒரு தரப்பையும் முழுமையாக ஆதரிக்காமல், இரு நாடுகளுடனும் உறவை பேணி, பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், போலந்து அமைச்சரின் இந்த கருத்து, சர்வதேச அரங்கில் இந்தியாவின் ராஜதந்திர செல்வாக்கு குறித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. அதே நேரத்தில், இந்தக் கூற்றுக்கு ரஷ்யா அல்லது இந்திய அரசு சார்பில் தனியான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.


