₹25,000 கோடி கோவில் நிலம் தனியாருக்கா? நயினார் ஆவேசம்!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட 4 முக்கிய கோவில்களுக்குச் சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்கள், சுமார் ரூ.25,000 கோடி மதிப்புடையவை என்றும், அந்த நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்கும் நோக்கில் அவற்றின் மீதான பத்திரப்பதிவுத் தடையை இந்து சமய அறநிலையத்துறை நீக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஜூலை 9-ஆம் தேதி காலை கரூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை, அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரை, பின்னர் சென்னையில் அறநிலையத்துறை ஆணையரின் இறுதி உத்தரவு என ஒரே நாளில் கோப்புகள் மின்னல் வேகத்தில் நகர்த்தப்பட்டதன் பின்னணி என்ன? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருக்கோவில் நிலங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதில் காட்டப்படும் இந்த அவசரத்தை, மக்கள் நலப் பணிகளில் அரசு ஏன் காட்டவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவுத் தடையை நீக்கிய உத்தரவை, முதல்வர் விஜய் தலையிட்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Scroll to Top