திருப்பூர்:’ஜோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செயல்படும் Aurobindo Vidhyalaya CBSE மற்றும் Abhishri Academy கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் கல்வியாளருமான வினீதா கோவிந்தசாமி, கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தங்களது கல்வி நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிர்வாகத் தடைகள் மற்றும் லஞ்சக் கோரிக்கைகள் தொடர்பாக சமூக வலைதளமான X-ல் பதிவு வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் பதிவிற்கு பதிலளித்துள்ள அவர், பள்ளிக் கட்டட விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகள் பல மாதங்கள் எவ்வித தெளிவான காரணமும் இன்றி நிலுவையில் வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும், தேவையான அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தபோதிலும், அதிகாரிகள் மறைமுகமாக லஞ்சம் வழங்கினால் மட்டுமே கோப்புகள் நகரும் என்ற சூழலை உருவாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
லஞ்சம் வழங்க மறுத்ததால், அனுமதிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.அதே பதிவில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, எந்தவித லஞ்சமும் இன்றி தங்களது விண்ணப்பங்களுக்கு விரைவாக ஒப்புதல் கிடைத்ததாகவும், “நிர்வாகத் தூய்மை என்பது சாத்தியமே என்பதை இந்த அனுபவம் நிரூபித்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தேனி மற்றும் தென்காசி பகுதிகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் தொடர்பாக, கடந்த ஆட்சியில் கட்டிட அனுமதி மற்றும் பிற ஒப்புதல்களுக்கு லஞ்சம் கோரப்பட்டதாக சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.தற்போது வினீதா கோவிந்தசாமியின் பதிவும் வெளியாகியுள்ள நிலையில், தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் எதிர்கொண்டதாகக் கூறப்படும் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கல்வித்துறையில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
இதுவரை இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அல்லது தி.மு.க. தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.


