சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும், ஆட்சி மாறிய பிறகும் இதுபோன்ற குற்றங்கள் தொடர்வது ஏற்க முடியாதது என்றும் சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முதன்மை கடமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலைக்குரியதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், பெண்கள் மீது கைவைக்கும் குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது என்றும், அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். “இனி பொறுத்தது போதும்; பெண்களும் சமூகமும் பொங்கி எழ வேண்டும்” என்று அவர் ஆவேசமாக பேசினார்.பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மீதான அச்சம் மட்டுமல்லாமல், மரண பயம் கூட ஏற்படும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சவுமியா அன்புமணி வலியுறுத்தினார்.
அத்துடன், பெண்கள் மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.சவுமியா அன்புமணியின் இந்த பேச்சு சட்டப்பேரவையில் கவனத்தை ஈர்த்ததுடன், பெண்களின் பாதுகாப்பு மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியது.


