சென்னை: கோவில் நிதியை பயன்படுத்தி திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானத் திட்டங்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கையை இந்து தமிழர் கட்சி வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்கள் வழங்கும் காணிக்கை நிதிகள் கோவில்களின் பராமரிப்பு, திருப்பணி, ஆன்மிக வளர்ச்சி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் கோவில் நிதியை பயன்படுத்தி திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் அமைக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகவும், இதற்கு எதிராக இந்து தமிழர் கட்சி சட்டப் போராட்டம் நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோவில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிதியில் இருந்து பல்வேறு பகுதிகளில் திருமண மண்டபங்கள் கட்டும் திட்டங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. பின்னர் அனைத்து வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்பட்டு, கோவில் நிதியை அதன் அடிப்படை நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு பயன்படுத்தக் கூடாது என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்புகளுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகிய போதும், மேல்முறையீடுகள் ஏற்கப்படவில்லை என்றும் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கோவில் நிதி கோவில்களின் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.115.77 கோடி மதிப்பிலான 29 திருமண மண்டபத் திட்டங்களும், ரூ.130.08 கோடி மதிப்பிலான 17 வணிக வளாகத் திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 திட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பது நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் பக்தர்களின் உணர்வுகளுக்கும் வழங்கப்பட்ட மரியாதை என இந்து தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.


