பெண்கள் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமதுவை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் அலிஷா அப்துல்லா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருந்த புகாரில், தனது கண்ணியம் மற்றும் தனியுரிமைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், பொதுவெளியில் கூற முடியாத அளவுக்கு ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதலில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் யூடியூபர் முக்தார் அகமதுவை தேடி வந்தனர்.போலீசாரின் தேடுதலுக்கு மத்தியில் கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த முக்தார் அகமது, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.முக்தார் அகமது சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் அரசியல் தொடர்பான சர்ச்சையான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தவர். குறிப்பாக அரசியல் எதிர்ப்பாளர்களை கடுமையாக விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த கைது நடவடிக்கை அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


