அண்ணாமலை விஜய் அரசை நோக்கி கேள்வி?!

தமிழக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பில் சில தனியார் செய்தி சேனல்கள் மற்றும் இணைய ஊடகங்களை முடக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், Polimer News, NewsTamilTV24x7 மற்றும் Tamil Janam News உள்ளிட்ட ஊடகங்களின் ஒளிபரப்பை கட்டுப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக கூறியுள்ளார். மேலும், அரசை விமர்சிக்கும் செய்திகள் மற்றும் விவாதங்களுக்கு இடமளிக்கும் ஊடகங்களை குறிவைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரமும், ஊடகச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு தகவல் தெரிவிப்பதும், விமர்சனங்களை வெளிப்படுத்துவதும் ஊடகங்களின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகங்களை கட்டுப்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றும், இது மக்கள் அறியும் உரிமையை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, செய்திகளைத் தடை செய்வது எந்த பிரச்சினைக்கும் தீர்வாக இருக்காது; மாறாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை பாதிக்கும் என அவர் கூறியுள்ளார்.தமிழகத்தில் ஊடக சுதந்திரம் முழுமையாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், எந்த ஊடகத்தையும் அரசியல் காரணங்களுக்காக கட்டுப்படுத்தும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top