தமிழக அரசின் செயல்பாடுகள் சட்டத்தையும் நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த போதிலும், முந்தைய திமுக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். இதன் விளைவாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு மன்னிப்பு கோர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.இந்த விவகாரத்தில் புதிய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேட்டுள்ளதாகவும், இதுகுறித்து அமைச்சர்களையும் முதல்வர் ஜோசப் விஜயையும் போஸ்ட் கார்டு மூலம் அணுகியுள்ளதாகவும் அவர் கூறினார். திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. நிர்மல் குமார் தெரிவித்த கருத்துகள் முருக பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாகவும், அதற்கு முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அனைத்து மதங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், அரசு ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தைப் போல இந்து பண்டிகைகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்தியது. கடந்த 40 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி ஜனநாயக ரீதியில் போராடி வருவதாகவும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.


