அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாகக் கடந்த இரண்டு மாதங்களாக ஊடகங்களில் விவாதம். அரசியல் விமர்சகர்கள் பலரின் நேர்காணல்கள்.
இந்தக் கேள்வியைப் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் பலமுறை கேட்டாகிவிட்டது. ஆனால் அண்ணாமலையின் பதில்கள் வழுக்கல் பதில்கள். ‘புதிய கட்சி எப்போ ஆரம்பிக்க போறீங்க’ என்று கேட்டதற்கு, ‘ஆரம்பிக்கும்போது உங்களுக்குச் சொல்லி அனுப்புறேன், அண்ணா’ என்று நகைச்சுவையாகக் கூறிச் சென்றார் அண்ணாமலை
தன்னைப் பற்றி இப்படி ஒரு பேச்சு அடிபடுகிறது என்பது அண்ணாமலைக்கும் நன்றாகத் தெரியும். அவர் நினைத்திருந்தால் என்றோ இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். ஆனால் வைக்கவில்லை. தன்னைப் பற்றிய விமர்சனங்களை அவர் ரசிக்கிறார்.
புதுக்கட்சி ஆரம்பிக்க அண்ணாமலைக்கு ஆலோசனை இருப்பதாகத் தெரியவில்லை.நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது மீண்டும் உறுதியாகியது. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவருடைய பதில்களை முழுமையாகக் கேட்டால் இது புரியும். ஒரு தனி நபராகப் புதுக் கட்சி நடத்தப் போதிய நிதி வசதி இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அண்ணாமலை என்ன கூறி இருக்கிறார் என்பதைச் சற்று பார்ப்போம்:
“நானும் உங்களை மாதிரி தான்.…. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நரேந்திர மோடியும் அமித்ஷாவும் தூய அரசியலைக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். அதனால்தான் என்னுடைய வேலையை விட்டு அரசியலுக்கு வந்தேன்……
நான் இன்று சாதாரணத் தொண்டனாகத் தான் கட்சியில் இருக்கிறேன். மனதுக்குப் பிடித்தால் இருப்பேன். பிடிக்கவில்லை என்றால் கிளம்பிப் போய் விடுவேன். என்னுடைய வேலையைப் பார்த்துக் கொள்வேன். விவசாயம் பார்த்துக் கொள்வேன்….
நேரம் வரும்போது நிச்சயமாக, கட்டாயமாக அதைப்பற்றி யோசிப்பேன்….. ( தமிழகத்தில் அரசியல்…)மாற்றம் நடக்கும் என்று நினைக்கிறேன்…. அதற்காகக் காத்திருக்கிறேன். என்ன நடக்கும் என்று பார்ப்போம்…
என்னை மாதிரி எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு தனி நபர் ஒரு தனிக்கட்சி நடத்த முடியும் என்று நீங்க நினைக்கிறீங்களா, அண்ணா?… சில சமயங்களில் என் மனசாட்சிக்கு எதிராகவும் நான் பேசியிருக்கிறேன்… மனசாட்சி ஒன்று சொல்கிறது. கட்சித் தலைமை வேறு ஒன்று சொல்கிறது. நான் ஒரு தொண்டனாய் கட்சித் தலைமைக்குக் கட்டுப்படுகிறேன்… காத்திருப்பதற்கு நான் தயார். தமிழகத்திற்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்… பொறுத்திருந்து பார்ப்பேன்…. நேரம் வரும்போது முடிவு எடுப்பேன்…”
அண்ணாமலை பேசியது இதுதான். நேரம் வரும்போது முடிவு எடுப்பேன் என்றுதான் கூறி இருக்கிறாரே தவிர அது எந்த முடிவு என்று கூறவில்லை. அது தனிக்கட்சியா என்றும் கூறவில்லை. இவ்வளவு சொல்லியும் கூட, இன்னும் ஏன் அண்ணாமலையை சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டும்?
அண்ணாமலை பேசியது இதுதான். நேரம் வரும்போது முடிவு எடுப்பேன் என்றுதான் கூறி இருக்கிறாரே தவிர அது எந்த முடிவு என்று கூறவில்லை. அது தனிக்கட்சியா என்றும் கூறவில்லை. இவ்வளவு சொல்லியும் கூட, இன்னும் ஏன் அண்ணாமலையை சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டும்?
இது ஊடகவியலாளர்கள் பாஜகவில் விரிசல் ஏற்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே செட் செய்யும் நேரேடிவ் ஆக இருக்கலாம். அண்ணாமலைக்கு இதுவும் தெரியும். இதற்கிடையில்…… அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற ஒரு புதிய அமைப்பு உருவாகியது. தன் பெயரில் நற்பணி மன்றம் அமைக்க அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதையும் அவர் ரசிப்பதாகத்தான் தெரிகிறது.
தமிழக அரசியலின் முழு ஃபோக்கஸும் தன்மீது இருப்பதை அண்ணாமலை நிச்சயம் ரசிக்கிறார். இது இயல்புதான். ஆனால் அண்ணாமலை தமிழ்நாட்டின் சராசரி அரசியல்வாதியை விட அறிவும் ஆற்றலும் மிக்கவர். பெரிய அளவில் சாதனைகள் செய்ய ஆர்வம் கொண்டவர். பெரிய பெரிய கனவுகள் வைத்திருப்பவர். நீண்ட காலம் பயணிக்கக் கூடியவர்.
இன்று நரேந்திர மோடி உட்பட கட்சியின் பெருந்தலைவர்கள் அரசியலிலிருந்து விலகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அவர்களின் விலகல் கட்சியில் புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தன்னைத் தானே தற்போது தயார்படுத்திக் கொள்கிறார் அண்ணாமலை.
இன்று நரேந்திர மோடி அமித்ஷா போன்றவர்களுக்காகவே அரசியலில் இருக்கும் அண்ணாமலை, அவர்கள் விலகிய பின்பும் கட்சியில் தொடர்வார். ஏனென்றால், பாஜகவில் அடுத்து வரும் தலைவர்களும் நரேந்திர மோடி, அமித் ஷா போலவே நேர்மையும் ஆற்றலும் செயல் திறனும் மிக்கவர்களாக இருப்பார்கள். எனவே அண்ணாமலையின் பாஜக பயணம் தொடரும்.
பெரிய பொறுப்புகளுக்காகக் காத்திருப்பார் அண்ணாமலை. தன்னுடைய நேரம் நிச்சயம் வரும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் அண்ணாமலை.இந்த ஐந்து ஆண்டுகளில் அரசியலில் தான் கற்றுக் கொண்டதை விட இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியதே அதிகம் என்ற உண்மையும் அண்ணாமலைக்குத் தெரியும். அரசியல் கற்றுக்கொள்ள பாஜகவை விடச் சிறந்த கட்சி வேறு எதுவும் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும்.
பாஜகவுக்குத் தொலைநோக்குப் பார்வை உண்டு. எதிர்காலத் தலைவர்களை இப்போதே அடையாளம் கண்டுகொண்டு விடுவார்கள். அவர்களுக்குச் சிறப்பான பயிற்சியளித்து, ஊக்கம் கொடுத்து உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அப்படிப்பட்டவர்களில் அண்ணாமலையும் ஒருவர்.உயரே செல்லச் செல்ல, கடுமையான போட்டி ஏற்படும். அந்தப் போட்டிக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டு வருகிறார் அண்ணாமலை. மனதில் தோன்றியதை அண்ணாமலை அப்படியே பேசுவதை வெகுளித்தனம் என்று கூறலாம். யோசித்துப் பேசுவது அவருடைய இயல்பு அல்ல. எதையும் எளிதாகச் சொல்லிவிடுவார்.
அவருடைய “boy next door” image அதாவது ‘பக்கத்து வீட்டுப் பையன்’ போன்ற எளிய தோற்றம் அவருக்கு உதவுகிறது.
அந்த எளிய தோற்றத்திற்குப் பின்னால் இரும்பை விட உறுதியான தன்னம்பிக்கை இருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும். துல்லிய திட்டமிடல் இருக்கும். ஆனால் இதெல்லாம் நமது வெளிப்பார்வைக்குத் தெரியாது.
அண்ணாமலை தன்னைத்தானே ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ள விரும்ப மாட்டார். நம் நாட்டின் நீளத்தையும் அகலத்தையும் நன்கு அறிவார் அண்ணாமலை. அதற்கு ஏற்ப அரசியல் செய்யக் கூடியவர்தான் அவர். புதுக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு என்கிற குறுகிய அரசியல் வட்டத்திற்குள் அண்ணாமலை இருக்க விரும்ப மாட்டார்.
அண்ணாமலை யாருக்கும் புதிர் அல்ல. அவரைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே அவர் ஒரு புதிர்.
